search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழை பயீர் காப்பீடு திட்டம்"

    வாழைக்கு பயிர் காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக புதுவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கமலகண்ணன் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் வேளாண்துறை சார்பில் வாழை சாகுபடியில் நவீன தொழில்நுட்பம், மதிப்புக்கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி 2 நாட்கள் வேளாண் வளாகத்தில் நடக்கிறது. இதன் தொடக்கவிழா இன்று நடந்தது.

    புதுவை வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தி வரவேற்றார். அமைச்சர் கமலகண்ணன் பயனாளிகளுக்கு டிராக்டர், பவர் டில்லர், நடவு எந்திரம் ஆகியவற்றை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    புதுவை விவசாயிகள் புதிய தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டு விவசாயம் செய்ய வேண்டும். ஒரே பயிரை சாகுபடி செய்வதால் பெரியளவில் பலன் கிடைக்காது. சுழற்சி முறையில் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும்.

    தென்னங்கன்றுகளை நடவு செய்தால் முதல் 3 ஆண்டுக்கு பலன் கிடைக்காது. இதனால் ஊடுபயிர் செய்ய வேண்டும். வழக்கமாக நெல்லுக்குத்தான் பயிர்காப்பீடு திட்டம் உள்ளது. வாழை காற்றடித்தால் சரிந்து விடுகிறது. பூச்சி தாக்குதலிலும் வாழை நாசமாகிறது. இதை கருத்தில் கொண்டு வாழைக்கும் பயிர் காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம்.

    புதுவை விவசாயிகள் தரமான விளை பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம், பெங்களூரு உணவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆணையம் ஆகியவற்றின் வல்லுநர்கள் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர். இந்த பயிற்சியில் புதுவை பகுதியை சேர்ந்த 50 வாழை சாகுபடி விவசாயிகளும், காரைக்கால் பகுதியை சேர்ந்த 10 வாழை சாகுபடி விவசாயிகளும் மற்றும் வேளாண் அதிகாரிகளுக்கு பயிற்சி தரப்படுகிறது.

    இன்று வேளாண் வளாகத்தில் உள்ள வகுப்பறையிலும், நாளை கூடப்பாக்கம், சிலுக்காரிபாளையம், நெட்டப்பாக்கம், மங்களம் ஆகிய கிராமங்களில் உள்ள வாழை தோப்புகளை பார்வையிட்டு செயல் விளக்க பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.
    ×